Wednesday, 29 February 2012

யார் இந்த மார்த்தாண்டன்கள்?

 பத்மநாபபுரம் அரண்மனை

பொதுவாக குளம் என்கிற குட்டையைத் தான் ‘குட்டம்’ என்றும் அழைப்பர். இந்த ஊர் அமைந்துள்ள பகுதியும் தாழ்வானதுதான்.

குட்டம் - உருவான வீர வரலாறு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள குளக்கரையில் கேரளாவில் இருந்து புதிதாய் வந்த சில குடும்பத்தினர் குடியேறினர்.

யார் இவர்கள்?

அன்றைய கேரளாவின் வேணாட்டு அரசில் சர்வ அதிகாரங்களும் பெற்றிருந்த இவர்கள், அப்பகுதியில் உள்ளூர் நிலப்பிரபுக்களாக திகழ்ந்தனர். ‘எட்டு வீட்டில்  பிள்ளைமார்’ (பேச்சு வழக்கில் எட்டு வீட்டு பிள்ளைமார்) என்ற உயரிய வகுப்பைச் சேர்ந்த இவர்கள், பத்மநாபபுரத்தில் (இன்றைய கன்னியாகுமரி ம £வட்டத்தில் உள்ள - புகழ்பெற்ற அரண்மனைக்கு சொந்தக்கார ஊர்தான்!) வாழ்ந்தனர். மக்கள் தலைவர்களாக செயல்பட்ட இவர்களைச் சார்ந்தே நாட்டை  ஆளும் மன்னர்களும் இயங்கினர்.

இந்நிலையில், வேணாட்டு அரசின் புதிய மன்னராக வாரிசு முறையில் பொறுப்பேற்ற மார்த்தாண்ட வர்மா கி.பி.1729 முதல் 1758 வரை ஆட்சி செய்தார்.  இவரது ஆட்சிக் காலத்தில் வேணாட்டு அரசின் தலைநகரான பத்மநாபபுரம் மாற்றம் செய்யப்பட்டது. அரசின் பெயரும் மாறியது.

 ‘திருவிதாங்கூர் சமஸ்
தானம்’ என்ற பெயரில் தனது நாட்டை பல அதிரடி நடவடிக்கைகளால் விரிவாக்கம் செய்த மார்த்தாண்ட வர்மா, திருவனந்தபுரத்திற்கு தனது தலைநகரை மாற்றினார்.

அப்போது, எட்டு வீட்டு பிள்ளைமார்களின் அதிகாரத்தை ஒடுக்க நினைத்த மார்த்தாண்ட வர்மா, அவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டார். அதிகாரங்களை பறித்தார். அவர்கள் தனக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திசை திரும்பலாம், ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கலாம் என்பதால்  அவ்வாறு செய்தார். மேலும், எட்டு வீட்டு பிள்ளைமார்களின் அளவற்ற சொத்துக்களையும் பறிமுதல் செய்தார். அவர்களது குடும்பப் பெண்களுக்கும்  பல்வேறு வகைகளில் துன்பங்கள் விளைவித்தார்.

மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட எட்டு வீட்டு பிள்ளைமார்களில் ஒரு பிரிவினர், தங்களது அதிகாரத்தை வேறு ப குதியில் நிலைநாட்ட முயன்றனர். அதன் தொடர்ச்சியாக, பத்மநாபபுரத்தில் இருந்து கிழக்கு திசை நோக்கி நீண்ட பயணம் மேற்கொண்டனர்.

வங்காள விரிகுடா கடற்கரையோரம் இயற்கை செல்வச் செழிப்புடன் காணப்பட்ட பகுதியை அடைந்ததும், அங்கே தங்களது புதிய குடியேற்றத்தை நிறுவினர்.  இந்த எட்டு வீட்டுப் பிள்ளைமார்தான் இன்றைய குட்டம் மார்த்தாண்டன் வகையறாக்கள்.

வேணாட்டு அரசில் ஒரு மன்னனுக்கு இணையான அதிகாரமும், ஆட்சியை கைப்பற்றும் பலமும் பெற்றிருந்த இவர்கள், தாங்கள் குடியேறிய புதிய பகுதியில்  ஒரு குறுநில அரசை அமைத்தனர். ‘மார்த்தாண்டன்’ என்ற பட்டப் பெயரோடு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளை ஆட்சி  செய்தனர். அவர்களில் முக்கியமான மன்னர் நவாப் குமார வீரமார்த்தாண்டன்.

ஆரம்ப காலத்தில் இவர் குமார வீரமார்த்தாண்டன் என்றுதான் அழைக்கப்பட்டார். ஒருமுறை, தன்னை எதிர்த்துப் போரிட்ட ஆற்காடு நவாப் படையினரை  மிகவும் தீரத்தோடு எதிர்த்து போரிட்டார். அதைப் பார்த்து வியந்த ஆற்காடு நவாப், தனக்கு இணையான ‘நவாப்’ பட்டத்தை அவருக்கு வழங்கி பெருமை  சேர்த்தான்.


நவாப் குமார வீரமார்த்தாண்டனுக்குப் பிறகு, அவரது வழி வாரிசுகளான ‘மார்த்தாண்டன் வகையறாக்கள்’ அப்பகுதியில் ஆட்சி அதிகாரம்  செலுத்தினர்.

கி.பி.1840-களில், அருகே உள்ள இடையன்குடி என்ற கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் ஊரில் குடியேறி கிறிஸ்தவ மதத்தை பரப்பியவரும், ‘திராவிட மொழி  நூலின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான கால்டுவெல்லிடமே மார்த்தாண்டன் வகையறாக்கள் வரிவசூல் செய்துள்ளனர். அதாவது, அவர்கள், கால் டுவெல்லுக்கு அன்றைய இடையன்குடி ஊரை 99 வருட குத்தகைக்கு விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் எட்டு வீட்டு பிள்ளைமார்களாக வந்த இவர்கள், காலப்போக்கில் சான்றோர் (நாடார்) குலத்தில் பெண் எடுப்பதும், கொடுப்பதுமாக இருந்து,  இப்போது சான்றோர் குலத்திலேயே முழுமையாக ஐக்கியமாகிவிட்டனர்.

எனினும், பெயருக்கு பின்னால் ‘நாடார்’ என்று எழுதுவதை தவிர்க்கும் இவர்கள்,  அதற்கு பதிலாக ‘மார்த்தாண்டன்’ என்று தங்களை பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் (உதாரணத்திற்கு : ஆனந்த் மார்த்தாண்டன்).

தங்களது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம், ஆனந்தவல்லி அம்மன்தான் என்று கருதிய இவர்கள், எந்த முடிவு எடுத்தாலும் அந்த அம்மனின்  உத்தரவு கேட்டே செய்தனர்.

மேலும், அந்த அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் பிரம்மாண்டமான முறையில் விழா எடுத்தும் கொண்டாடி  மகிழ்ந்தனர். இன்று வரையிலும் இது தொடர்கிறது.

Saturday, 10 December 2011

அம்மன் பேசுவாள்!


ந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது -

கம்பீரமாக காணப்பட்ட ஒரு குதிரையில் வேகமாக வந்தான் ஆங்கிலேய அதிகாரி ஒருவன். ஒரு கிராமத்தில் கோவில் முன்பு திரண்டிருந்த மக்கள் அருகே வந்து நின்றான். “ஏன் இங்கே இந்த கூட்டம்?” என்று விசாரித்தான்.
அந்த கிராம மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தனர்.


“ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்கள்? நீங்கள் எதுவும் கேட்டால், அந்த சாமி நேரில் அதை கொண்டு வந்து தரப்போகிறதா?” என்று கேலியாக கேட்டு சிரித்தான்.

அவனது பேச்சுக்கு மறுபேச்சு பேசிய அந்த கிராமமக்கள், தங்கள் ஊர் தெய்வத்தின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறினர். தங்கள் தெய்வம் தங்களுடன் பேசும் என்றும் தெரிவித்தனர். அதையெல்லாம் கேட்ட அந்த அதிகாரி வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.

ஆனாலும், இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்குமா? என்று சந்தேகம். உடனே, “உங்கள் ஊர் அம்மனுக்கு பேசும் சக்தி உண்டு என்றால் என்னிடம் பேசச் சொல்லுங்கள்” என்றான்.

கிராமமக்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. கண்கண்ட தெய்வத்தையே சோதிக்கிறானே... இவனுக்கு என்ன ஆகப்போகிறதோ... என்று மனதிற்குள் நினைத்தவர்கள், “நீங்களே அந்த சாமியிடம் கேளுங்கள்” என்றனர்.

சற்று கோபமான அந்த ஆங்கிலேயன், குதிரையில் இருந்தபடியே, “ஏய் அம்மனே... இவர்கள் கூறுவது போல் நீ சக்தியுள்ள தெய்வம் என்றால், இப்போது என்னிடம் பேசு” என்று கிண்டலாக கத்தி சிரித்தான்.

அவனது ஏளனப் பேச்சுக்கு அந்த கணமே தண்டனை கிடைத்தது. கோவில் சன்னதிக்குள் இருந்து வேகமாக புறப்பட்டு வந்த ஒரு பேரொளி அவனது கண்களை குருடாக்கியது. குதிரையில் இருந்து கீழே விழுந்தான். குதிரையும் தனியாக வேகமெடுத்து ஓடியது.

அதிர்ந்து போனான் அந்த அதிகாரி. செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி, அந்த அம்மனிடமே முறையிட்டான். மனம் திருந்திய அவனுக்கு அந்த அன்னையும் மன்னிப்பு வழங்கினாள். அவனது பறிபோன கண் பார்வை திரும்பக் கிடைத்தது.

மகிழ்ச்சியில் உள்ளம் பூரித்துப் போனான் அந்த ஆங்கிலேய அதிகாரி.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த கிராமம் வழியாகச் செல்லும் ஆங்கிலேயர்கள், தவறாமல் கண் பார்வையை மீட்டுக் கொடுத்த அந்த அன்னையையும் வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலம், திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் - கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள குட்டம். இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்தான் மனம் திருந்திய ஆங்கிலேய அதிகாரிக்கு பார்வை கொடுத்த அன்னை.

அன்று மட்டுமல்ல, இந்த அன்னையின் சக்தி இன்றும் பிரபலம். பல நூறாண்டுகள் பழமை வாய்ந்தது இந்த கோவில்.